தமிழ்நாடு அரசியல் வரலாறு..

தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் என்ற தொடரில் ஒரு பகுதி
  
       1900 களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், திராவிட கொள்கைகள், பகுத்தறிவு கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்கு தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிச கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.


       தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.


       தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள் கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

         காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்.,  போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.


        தந்தை பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமி 1916 இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.


       1967 முதல் 2011 இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2011) செயல்பட்டது.
பின்னர் குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்றது.